கிளிநொச்சி, தொண்டமான் நகரில் ஒருவர் கொரோனா தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளார். 72 வயதுடைய ஒருவரே தொற்றுடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு எவ்வாறு கொரோனா தொற்று ஏற்பட்டது என்பது கண்டறியப்படாத நிலையில், சுகாதாரத் துறையினர் துரித நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.
கிளிநொச்சி 55ஆம் கட்டைப் பகுதியில் ஒயில் கடை நடத்தும் ஒருவருக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளார்.
அவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டதை அடுத்து அவருக்கு பி.சி.ஆர். பரிசோதனை நடத்தப்பட்டது. அவரது குடும்பத்தினரும் தனிமைப்படுத்தனர்.
இன்று கிடைத்த பரிசோதனை முடிவில் அவருக்குக் கொரோனா தொற்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர் அண்மைய நாள்களில் கிளிநொச்சியில் நடமாடிய இடங்கள் மற்றும் தொடர்பு கொண்டவர்களை இனங்காண்பதில் சுகாதாரத் துறையினர் கடும் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர்.
இது தொடர்பாக சுகாதாரத் துறையினர் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதுடன், இவருடன் தொடர்புடையவர்களை இனங்காணும் முயற்சிகளையும் ஆரம்பித்துள்ளனர்.
இவரது கடைக்கு அண்மையில் உள்ள கடைகள் மூடப்பட்டுள்ளன.அந்தக் கடைகளைச் சேர்ந்தவர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவரது கடையில் பாரவூர்திகள் மற்றும் டிப்பர் வாகனங்களின் சாரதிகள், உதவியாளர்கள் ஒயில் வாங்குவதற்கு வந்து செல்கின்றனர். அவர்களில் ஒருவரால் வயோதிபருக்கு கோரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அதேவேளை, கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் அறிவுறுத்தலில் கிளிநொச்சி மாவட்டத்துக்கு வருகை தரும் பாரவூர்திகளின் சாரதிகள் பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்படுகின்றனர்.
எனினும் தென்பகுதியிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தரும் பாரவூர்திகளின் சாரதிகள் மற்றும் உதவியாளர்களுக்கு பிசிஆர் பரிசோதனை முன்னெடுப்பது யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பொறுப்பாகும்.
இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் ஒரு வாரங்களுக்கு மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சியில் கொரோனா தொற்றாளர் ஒருவர் இன்று அடையாளம் காணப்பட்டதையடுத்து வடமாகாண ஆளுநரின் அறிவுறுத்தலுக்கு அமைய வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
அவருக்கு எப்படி தொற்று ஏற்பட்டது என்பதை கண்டறிய முடியாததால், சமூக தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது