Home Health & Fitness கொரோனா வைரசின் தாக்கமும் அதனால் ஏற்படும் மனநலப் பாதிப்பும்!

கொரோனா வைரசின் தாக்கமும் அதனால் ஏற்படும் மனநலப் பாதிப்பும்!

(Impact of Corona virus its Short term and Long term effect of mental health problem)’ கொரோனா வைரஸ்’ என்னும் உடல் ரீதியான தொற்று நோயானது இன்று உலகெங்கிலும் பல உயிர்களை காவு கொண்டு வருகின்றது.

சீன நாட்டின் ஏதோ ஒரு மூலையில் தொற்றி தாக்கத் தொடங்கிய இந்த கொரோனா வைரஸ் இன்று உலகளாவிய ரீதியாக பரவிக்கொண்டிருக்கும் ஒரு தொற்று நோய்க் கிருமியாக இன்று உருவெடுத்து அரசாங்கங்களும்,மக்களும் சுதாரிப்பதற்கு முன்னரேயே வெகு விரைவாக பல வழியிலும் உலக நாடுகளில் ஏதோவொரு வழியில் உள் நுழைந்து பலரின் இறப்பிற்கு காரணமாகி வருகின்றது.

இதனை உடல் நோயாக நாம் பார்த்தாலும் இந்நோயின் தாக்கமானது எதிர்காலத்தில் சமூகத்தில் குறுங்கால, நீண்ட கால உளப் பிரச்சினையும், உளப்பாதிப்பினையும் ஏற்படுத்தப் போகின்றன என்பதனையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

உலகளாவிய ரீதியில் மருத்துவத் துறையும்,விஞ்ஞானமும் எவ்வளவு முன்னேறினாலும் கொரோனா வைரஸ் பாதிப்பானது வல்லரசு நாடுகளுக்கும், அபிவிருத்தி அடைந்த மற்றும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கும் ஒரு சவாலாக காணப்படுகின்றது.

என்ன தான் விஞ்ஞான வளர்ச்சி வானத்தை தொட்டாலும், இக் கொரோனா வைரஸ் இன்று மனிதனின் விஞ்ஞான கண்டுபிடிப்பினதும், மருத்துவ வளர்ச்சியினதும் அத்திவாரத்தையே ஆட்டம் காண வைத்துள்ளதென்பதே வெளிப்படையான உண்மை.

இது இன்று விஞ்ஞானத் துறைக்கும் மருத்துவத்துறைக்கும் ஏற்பட்ட ஒரு சவாலாக காணப்படுகின்றது.

இக் கொரோனா வைரஸ் பற்றி மருத்துவ ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும், சமய , புராண கதைகள் வாயிலாகவும் ஆன்மீக ரீதியாகவும்,புனைக் கதைகளின் வாயிலாகவும் விளக்கம் கொடுத்தாலும், அது எந்த அளவிற்கு உண்மை என்பதே கேள்விக் குறியாக காணப்படுகின்றது.

பொதுவாக ஏனைய தாக்கம் கூடிய, தாக்கம் குறைந்த உடல் நோய்கள் போல் அல்லாது, இதன் தொற்றும் தாக்கமும் வேகமானதாகவும், வீரியம்மிக்கதாகவும் காணப்படுவதோடு இன்று படித்தவர் முதல் பாமரர் வரையான அனைவருமே இந்த வைரஸ் தாக்கத்தின் பாதிப்பை ஓரளவு அறிந்தவராகவே காணப்படுகின்றனர்.

வரலாற்றில் எப்போதும் இல்லாதவாறு ஒவ்வொரு நாளும் இதன் தாக்கத்தின் விளைவால் ஒவ்வொரு நாட்டையும்,நாட்டு மக்களையும் சுயநலமாக சிந்திக்கத் தூண்டிவிட்டது என்றே கூற வேண்டும்.

இதன் காரணமாக ஒவ்வொரு நாடும் தங்கள் எல்லைகளை மூடியும், தம் நாட்டுமக்ககளை காக்கவும் முனைப்புடன் நடவடிக்கைகளை செயற்படுத்தும்.

இதேவேளை மேலைத்தேய நாட்டவர்களை நோய் கிருமி தொற்றுக்குள்ளானவர் என்ற சந்தேகத்தையும், மனப்பீதியையும் சமூகத்தில் ஏற்படுத்திவிட்டது.

இதனால் நாட்டுக்குள் முடங்கிய மக்கள், இன்று வீட்டுக்கு வீடு முடங்கும் ஓர் மனநிலையை மக்கள் மத்தியில் இக் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்படுத்திவிட்டது.

இதுமட்டுமன்றி ஒரு இயல்பான வாழ்க்கை வாழ்ந்த மக்களின் போக்குவரத்து, பொருளாதாரம், உணவு, கல்வி, நிர்வாகக் கட்டமைப்பு, சமூக ஒன்று கூடல் போன்ற அடிப்படை அம்சங்களையே இன்று கொரோனா வைரஸின் தாக்கமானது கேள்விக் குறியாக்கியுள்ளது.

இதனால் சமூகத்தின் ஓர் பயங்கலந்த வாழ்க்கை முறைமையும், அடுத்து என்ன நடக்குமோ என்று எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையற்ற தன்மையும் மக்கள் மனங்களில் ஆழமாகப் பதிந்துள்ளது.

இதனால் சமூகத்தின் இயல்பான வாழ்க்கை பாதிக்கப்பட்டு எதை செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்ற பல கேள்விக்குறியோடும், சந்தேகத்தோடும் கூடிய நடத்தை கோலங்களை சமூகத்தில் மக்கள் மத்தியில் காணமுடிகின்றது.

இதனால் மக்களின் இயல்பு வாழ்வு பாதித்தது மட்டுமன்றி மனநிலைகளையும், மனப்பாங்குகளையும் கூட கொரோனா வைரஸ் பாதிப்பு மாற்றிவிட்டது என்பதை மறுக்க முடியாது.

குறிப்பாக போரினால் பாதிக்கப்பட்ட சமுதாயமானது கொஞ்சம் கொஞ்சமாக மனவடுக்களில் இருந்து மீட்சி பெற்று வரும் இந்த வேளையில் இந்த கொரோனா வைரஸ் இன் தாக்கமானது மீண்டுமொரு போர் சூழலில் வாழ்வதை போல் மக்களை உணரச் செய்துவிட்டது.

இவ்வாறான தாக்கமானது போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் ஆழ்மனதில் புதைந்துள்ள பல பிரச்சினைகளுக்கு தீனி போட்டு வெளியே கொண்டுவந்து மனப்பாங்குகளையும், நடத்தைக் கோலங்களையும் கணிசமான அளவு பாதிக்கும்.

இந்த வகையில் இழப்பு, துயரம், பிரிவு, காணமற்போன உறவுகள் போன்ற பல்வேறு காரணிகளால் பாதிக்கப்பட்ட இச் சமுதாயம் மீண்டும் ஒரு அழிவை சந்திக்க போகின்றோமா? என்ற பயத்தினை ஒவ்வொருவர் முகத்திலும் காணக் கூடியதாக உள்ளது.

இதனை ஒரு பொருட்டாக சிலர் எடுத்துக் கொள்ளாவிட்டாலும் ஆழ்மனதில் இந்த வைரஸ் தாக்கம் பற்றி பயம் ஒவ்வொரு மனித மனதினையும் பீடிக்காமல் இல்லை.

இதற்கு காரணம், இந்த நோயின் அடிப்படையை கண்டறியாததும் அதற்குரிய மருத்துவ முறைகளும், கொரோனா நோயாளிகளை கையாளும் முறைகளும், பல்வேறுபட்ட வதந்திகளும் முக்கிய காரணங்கள் எனலாம்.

இந்த வகையில் மக்கள் மத்தியில் இனம் புரியாத பதட்டத்தினை இவ் கொரோனா ஏற்படுத்தி விட்டாலும் இது எதிர்காலத்தில் சில உளப்பிரச்சினைக்கும், மனப்பாங்கு மாற்றத்திற்கும் அடிப்படையாக அமையும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

இன்று சாதாரண தடிமன், காய்ச்சல், தலைவலி போன்ற பிரச்சினைகளுக்கு பலர் மருத்துவரை நாடாமல் வீட்டிலேயே தங்களால் இயன்ற வைத்தியத்தை செய்து வருகின்றனர்.

இதற்கு காரணம் மருத்துவமனைக்குச் சென்றால் கொரோனா பாதிப்பு என முத்திரை குத்திவிடுவார்கள் என்ற ஆழ் மனதில் காணப்படும் பயம் தான் முக்கிய காரணம். சாதாரண காய்ச்சல், தலை வலிக்கு கூட மருத்திவரிடம் செல்லாது மருந்தகத்தில் தமக்கு தெரிந்த மருந்துகளை மக்கள் வாங்கி உபயோகித்து வருகின்ற சூழ்நிலைக்கு மக்கள் மனப்பாங்கினை இது மாற்றிவிட்டது.

இன்று சாதாரணமாக தும்மினாலோ, இருமினாலோ கொரோனாவாக இருக்குமோ என்று தானாக உருவாகும் எண்ணங்களால் (Automatic Thoughts) மக்களுக்கு இயல்பாக வருகிறது.

இதற்கு காரணம் இதனால் ஏற்படும் இறப்புக்களின் எண்ணிக்கையே உண்மையில் இது மக்கள் மத்தியில் குறுகியகால, நீண்டகால மனப்பாதிப்பினையும், மனப்பாங்கு மாற்றத்தினையும் ஏற்படுத்த போகின்றது.

உதாரணமாக- ஓர் குழந்தை ஒவ்வாமையாலோ, தடிமனாலோ தும்மினால் கூட கொரோனா பாதிப்பாக இருக்குமோ? என்ற பயத்தினை தாய்க்கு ஏற்படுத்திவிடும்.

இதனால் இன்று ஒருவர் சாதாரணமாக இருமினாலோ, தும்மினாலோ மற்றவர்கள் சந்தேகத்தோடு, கோபத்தோடு, எரிச்சலோடும், பயத்தோடும் குறித்த நபரை பார்க்கும் ஓர் எதிர்மறையான மனப்பாங்கையும், நடத்தை கோலங்களையும் இது உருவாகி விட்டது.

இந்தவகையில் பெரிய உடல் நோய்க்கு பயப்படாதவர்கள் கூட இருமலுக்கும், தும்மலுக்கு பயந்து ஒதுங்கும் ஓர் மனப்போக்கிணையும் எண்ணக்கட்டமைப்பில் மாற்றத்தினையும் கொரோனா பாதிப்பு சமூகத்தில் உருவாக்கியுள்ளது.

இதன் பாதிப்பு ஏற்கனவே மனச்சோர்வு, மன அழுத்தம், பதட்டம், கட்டுக்கடங்கா நினைவு நடத்தை, கோபம், பயம், எரிச்சல், வாழ்க்கையில் நம்பிக்கையின்மை, குற்ற உணர்வு, பழிவாங்கும் தன்மை போன்ற உள நோயினாலும், உளப்பிரச்சினையினாலும் பாதிக்கப்பட்டவர்களையும்;,சாதாரண மக்களையும் இதன் தாக்கம் தூண்டிவிட்டு பல உளம் சார், நடத்தை சார் பிரச்சினைகளையும் ஏற்படுத்தும்.

01) மனச்சோர்வு (Depression)

மனச்சோர்வானது மனிதனை விரக்தி நிலைக்கு இட்டுசென்று தற்கொலைக்கு தூண்டும்; அத்துடன் இது தற்கொலை மனப்பாங்கு, எண்ணங்களை (Suicide Ideation/Thoughts)கணிசமாண அளவு கொண்டுள்ள ஒருவகையான உளநோயாகும்.

இந்நோயால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இக் கொரோனாத் தொற்று பாதித்தால் வாழ்க்ககையில் நம்பிக்கையற்றவர்களாய், வாழ்க்கை முடிந்து விட்டது என்று எண்ணி, தற்கொலைக்கு முயற்சிப்பார்கள்,

இதனால் தனக்கு சிகிச்சை அளிக்க வேண்டுடாமென்ற விரக்தி மனநிலைக்கு செல்வதுடன் சிகிச்சைக்கு ஒத்துளைக்க மாட்டார்கள் அத்தடன் இவர்களுக்கு வாழ்க்கையை முடித்துவிட வேண்டும் அல்லது முடிந்துவிட்டது என்ற மனநிலையே காணப்படும்.ஆனாலும் சிலருக்கு ஒர் குழப்பமான மனநிலைகாணப்படும்.

02) மன அழுத்தம் (Stress)

மன அழுத்தமானது இந்நோயால் பீடிக்கப்பட்டவர்களுக்கும், கொரோனா பற்றிய பயம் உள்ளவர்களுக்கும் அதிகளவு காணப்படும்.

இந்நோய் மாறாது என்ற எண்ணம். இதனை நான் எவ்வாறு எதிர் கொள்ள போகின்றோம் என்ற பயமும் இவர்களின் மனதை ஆக்கிரமித்துக்கொண்டே இருக்கும்.

இதனால் நிம்மதியற்றவர்களாய், சிந்தனை குழப்பத்துடன் காணப்படுவார்கள். இவர்களின் மனநிலை எனக்கு ஒன்றும் வேண்டாம் இந்த நோயிலிருந்து தப்பித்தால்,விடுபட்டால் போதும் என்ற மனப்பாங்கும் காணப்படுவதுடன் அமைதியற்றும் காணப்படுவர்.

03) பதகளிப்பு(Anxiety)

இனம் புரியாத கவலை,பதட்டம்
நோய் தொற்றியவர்களை விட, தொற்றாதவர்களுக்கு பதகளிப்பு , இனம்புரியாத கவலை அதிகமாக காணப்படும். இதனால் எந்நேரமும் அந்நோய் தம்மை தாக்கலாம் என்ற பயமும் பீதியும் இவர்களிடையே காணப்படுவதுடன் அவர்கள்து ஒவ்வொரு செயற்பாட்டிலும் நிம்மதியற்றும் இருப்பர்.

04) கட்டுக்கடங்கா நினைவு நடத்தை (Obsessive–Compulsive Disorder (OCD)

கட்டுக்கடங்கா நினைவு நடத்தை என்பது ஓர் வகையான கட்டுப்படுத்த முடியாத , தீவிர செயல் வடிவம் பெறும் எண்ண அல்லது சிந்தனை ஆக்கிரமிப்பு நடத்தையாகும்.

இதனால் சிலர் சில விடயங்களை அல்லது செயல்களை திரும்பத் திரும்ப செய்து கொண்டே இருப்பார்கள் உதாரணமாக:- அடிக்கடி கை கழுவுதல், அடிக்கடி குளித்தல், அடிக்கடி துணிதோய்த்தல்,அடிக்கடி சுத்தம் செய்தல் போன்றவற்றை குறிப்பிடலாம்.

இதற்கு காரணம் சிலருக்கு கிருமி தொற்று பற்றிய அதீத பயமும் அது தொடர்பான தீவிர எண்ணங்களுமே ஆகும். ஆனாலும் ஓர் சிலருக்கு இது அதிகமாக காணப்படும்.

உதாரணமாக இதனால் தீவிரமாக பாதிக்கட்டவர்கள் சமைக்கும் அடுப்பிற்கு பாவிக்கும் விறகுகளை கூட கழுவி வெயிலில் உலர வைத்து சமையலுக்கு பயன்படுத்துவார்கள்.

சீனி என்பவற்றை கழுவிய பிறகே தேநீருக்கு பயன்படுத்துவார்கள். இன்னும் சிலர் எதை தொட்டாலும் அடிக்கடி கை கழுவுவார்கள். ஒரு சிலர் தமக்கென்றே சாப்பாட்டு தட்டுக்களையும், தேநீர் குவளைகளையும் போகும் இடமெல்லாம் எடுத்துச் சென்று பயன்படுத்துவார்கள்.

எந்த சூழ்நிலையிலும் மற்றவர்களின் பொருட்களை பயன்படுத்த மாட்டார்கள். அதனால் இவர்கள் சமூகத்தில் பல பிரச்சினைகளை எதிர்நோக்குவதுடன், குடும்ப வாழ்க்கையில் ஓர் திருப்தியற்ற வாழ்க்கையினையே வாழ்ந்து கொண்டு இருப்பார்கள்.

இவ்வாறாக கட்டுக்கடங்கா நினைவு நடத்தையால் (OCD) பாதிக்கப்பட்டவர்களுக்கு இக் கொரோனா தொற்றின் பாதிப்பானது கட்டுக்கடங்கா நினைவு நடத்தைகளை (தீவிரமான சுத்தம் பார்த்தல்) மேலும் ஊக்குவிப்பதாக அமைவதுடன், ஒரு நிம்மதியற்ற பதட்டமான நடத்தைக் கோலங்களை ஏற்படுத்திவிடும்.

இதுமட்டுமன்றி, ஓரளவு சுத்தம் பேணுபவர்களை அல்லது கட்டுக்கடங்கா நினைவு நடத்தை பாதிப்பினால் ஆரம்ப நிலையில் உள்ளவர்களை கூட இக் கொரோனா தொற்றின் தாக்கமானது எதிர்காலத்தில் கட்டுக்கடங்கா நினைவு நடத்தைக்கு ஆளாக்கிவிடும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

இதனால் எதை தொட்டாலும்,பார்த்தாலும் கொரோனா கிருமி அல்லது வைரஸ் இருக்குமோ? என்ற எண்ண ஓட்டமும், பயமும், பதட்டமும் காணப்படடும். அவர்களை எந்த பொருளை தொட்டாலும், யாருடன் பழகினாலும் சுத்தம் செய்ய வேண்டும் என்ற மனநிலை அல்லது எண்ணம் காணப்படும்.

அவ்வாறு செய்யாவிடின் உடல் ரீதியாக தான் பாதிக்கப்படுவதாகவும் ஓர் மனப்பிரம்மை அல்லது கற்பனை செய்வதுடன்; சிலர் அவ்வாறே பாதிப்புக்களை எதிர் கொள்வார்கள்.

உதாரணமாக சுடவைத்து வடிகட்டிய தண்ணீர் அல்லாத சாதாரண தண்ணி குடித்தால் இருமல், காய்ச்சல் உடல், உபாதைகள் ஏற்படும் என்ற எண்ணம் ஆட்டுவிக்கும் ஆனால் சிலருக்கோ உடல் உபாதைகள் அவர்கள் நினைப்பது போல் ஏற்படும்.

இதனால் அதிகளவான பாதிப்பினை கட்டுக்கடங்கா நினைவு நடத்தை (OCD) உள்ளவர்களையும் மன ரீதியாகவும்,நடத்தை கொரோனா பற்றிய பயம் அதிகம் பாதிக்கும். மனவெழுச்சிப் பிரச்சினைகள் (Emotional Problem)

கோபம் (Anger)

கொரோணா தொற்றின் பாதிப்புள்ளானவர்கள் அதிகளவு கோப உணர்வுடன் காணப்படுவதுடன் அக்கோபமானது தன்னை பற்றியும் தன் அலட்சியப் போக்கால் இந் கொரோணாவந்ததென்ற எண்ணமும், சமூகத்தின் மீது உள்ள கோபமும் இவர்களிடத்தே மாறி மாறி காணப்படும்.

இதனால் தன்னிடமும் சமூகத்திடமுமம் ஓர் கோப மனப்பான்மை காணப்படும். கொரோனா தொற்று பற்றிய எண்ணம் உள்ள ஒருவருக்கு யாரெனும் ஒருவர் சுத்தம் பேணாது காணப்பட்டாலோ,கூட்டத்தில் இருமினாலோ,எச்சில் துப்பினாலோ சிலருக்கு அதிகளவு கோபம் வர வாய்ப்புள்ளது.

இது சமூகப் பொறுப்புணர்வினால் கோபம் வந்தாலும் தானும் பாதிக்கப்பட்டு விடுவேனோ என்ற மனப்பாங்கும் கோபத்திற்கு ஒர் காரணமாகும். இது கொரோனா பற்றிய பாதிப்பின் அனுபங்களினது ஆழ்மனப்பதிவுகளின் மனவெழுச்சியுடன் கூடிய மனப்பாங்கு மாற்றமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பயம் (Fear)

கொரோனா பாதித்த ஒருவர் அதிகளவு பயத்துடன் காணப்படுவர். இந்த நோயால் தான் தப்பித்துக் கொள்ள வேண்டும். என்ற பயமும், அவ்வாறு தப்பித்துக் கொண்டாலும் எதிர் காலத்தில் தன்னை மீண்டும் பாதிக்குமோ என்ற வகையிலும் சிந்திப்பதுடன், எப்ப வேண்டுமானாலும் அதுவும் இறந்துவிடுவேனோ? என்ற பயத்துடன் கூடிய ஓர் வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பர்.

மேலும் கொரோனா பற்றி பயமானது மக்கள் மத்தியில் அதிகமாக காணப்படுவதால் எங்கு சென்றாலும், இந்த நோய் தொற்றிவிடுமா? தொற்றிவிட்டால்? என்ற பய உணர்வுகளுடன் இவர்கள் காணப்படுவதால் அதிகளவு வெளியில் செல்வதைக் குறைத்து பயத்தினால் வீட்டினுள் முடங்கிவிடுவார்கள்.

சிறுவர்களது மனநிலை பாதிப்புக்கள்
சிறுவர்கள் மத்தியில் கொரோனா வைரஸ் பற்றி நோக்கும் போது இதனை சிலர் பேய்,பூதம் என்றவாறாக கற்பனை பண்ணி பீதியடைவர்.

சிலர் பெற்றோரின் பக்குவமான கொரோண வைரஸ் பற்றிய விளக்கத்தினால் ஓரளவு பயமற்று காணப்பபடுவதுடன் பெற்றோர் கடைப்பிடிக்க சொல்லும் வழிவகைகளை பின்பற்றுவார்கள்.

ஆனாலும் பெற்றோரும் சமூகத்தவரும் இது தொடர்பான அதிகளவு பயத்தினை அவர்களுக்கு உண்டுபண்ணினால் அவர்களுக்கு பயம் ஏற்பட்டு நித்திரைக் குழப்பம், கெட்ட கனவு காணுதல், படுக்கையில் சிறுநீர் கழித்தல், நித்திரையில் பயந்து கத்துதல்,பெற்றோரின் கையை இறுகப் பற்றி பிடித்தல், தனியாகப் இருக்க, தூங்கப் பயம் போன்ற பாதிப்புக்கள் ஏற்பட வாய்புண்டு.

இதனால் அவர்களது ஆளுமை வளர்ச்சி எதிர்காலத்தில் பாதிக்கப்படும்.இதனால் பெற்றோரும்,சமூகத்தவரும் பொறுப்புடன் சிறுவர்களை கையாள வேண்டும்.

எனவே ஓர் நோய் பற்றிய அதிக பயமே அந்நோய் வர காரணமாக அமைந்து விடுகின்றது என்பது சில ஆராட்சிகளின் முடிவாகும். இது அந்நோய் பற்றிய தீவிர சிந்தனையால் ஏற்படுவதும் உண்டு. ஒரு வகையில் கொரோனா அதிகளவு நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களை தாக்குவதில்லை என குறிப்பிடுகின்றனர்.

இதனால் எமது மனநிலைகளிலும் வாழ்கை முறைகளிலும்; மாற்றங்களை கொண்டுவர வேண்டியது அவசியமாகும்.இந்த வகையில் எமது நேர்முகமான உளத்திறனை அதிகரிப்பதுடன் நேர்முகமான சிந்தனைப் போக்கினையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

எம்மை பற்றிய ஓர் நம்பிக்கையை நாங்களே உருவாக்கிக்கொள்ள வேண்டும். அத்துடன் உடலுக்கு சக்தி தரக்கூடிய பாரம்பரிய உணவுகளை உட்கொள்ளுவதுடன் எமது சுகாதாரத்திலும் நாம் அக்கறை காட்ட வேண்டும். மேலும், இயற்கையோடு ஒட்டிவாழும் வாழ்க்கை முறைக்கு எம்மை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

உண்மையில் இவ்வாறான பிரச்சினைக்கு காரணம் மனிதன் இயற்கையாக நியதிகளை விதிகளை மாற்றியமைக்க முற்பட்டதேயாகும்.

இந்த வகையில்,இயற்கை விதிகளையும் நியதிகளையும் மனிதன் மாற்றி அமைத்தால் இவ்வாறானதொரு நிலைதான் ஏற்படும் என்பதனை இவ்வாறான பிரச்சினைகளிலிருந்து இருந்து மனிதன் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here